Showing posts with label உடல் ஆரோக்கியம். Show all posts
Showing posts with label உடல் ஆரோக்கியம். Show all posts

Friday, May 14, 2010

மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்

மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.

மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.

செரிமானம் எப்படி ஏற்படுகிறது?
முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது ஆரம்பமாகிறது. பிறகு உணவு வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும்.

வயிற்றிலுள்ள உணவு, அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு, சிறு குடலுக்குச் செல்கிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மை அதிகமாகும்போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.

சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத்தன்மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன் கலந்து, உணவு அமிலத்தன்மை இழந்து, நடுநிலை ((நெரவசயட)) அடைகிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன.

பெருங்குடலில் இக்கழிவுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:
1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.

மலச்சிக்கலுக்கு அக்குபிரஷர் சிகிச்சை:
அக்குபிரஷர் முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.

பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.

வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.

இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால் ‘நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.

நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.

Saturday, May 8, 2010

உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது : ஒரு க்ரைம் ரிப்போர்ட்

உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என மதுரையில் சிலர் 'ரூம் போட்டு யோசிப்பார்கள்' போல் இருக்கிறது. விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காக விதம் வித மாய் கலப்பட உத்திகளை மதுரையில் கண்டுபிடித்துள்ளனர். முன்பெல்லாம் அரிசியில் கல்லை கலப்பது, பாலில் தண்ணீரை கலப்பது, ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியை கலப்பது தான் அதிகபட்ச கலப்படமாக இருந்தது. இப்போது நினைத்து பார்க்க முடியாத வகையில் கலப்படங்கள் நடக்கின்றன.

எப்படி கலப்படங்கள் நடக்கின்றன அவற்றின் பட்டியல் உங்கள் பார்வைக்கு:

* பாலில் ஜவ்வரிசியை துணியில் கட்டி போட்டு விடுவர். இப்போது கெட்டியான பால் ரெடி.
* டீத்தூளில் முந்திரி தோல், புளியங்கொட்டை தோல், மஞ்சணத்தி இலைகளை கலக்கின்றனர். திடமான டீ தயார்.
* பழைய சோற்றை துணியில் கட்டி, வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு அடித்து, அதை வெண்ணெயுடன் கலக்கின்றனர். பார்க்க வித்தியாசம் தெரியாது. உருக்கினால் நெய் வராத வெண்ணெய் இது. பட்டர் பன் தயாரிக்க இது பயன்படுகிறது.
*நெய்யில் வனஸ்பதியை கலந்து, 'சுத்தமான பசு நெய்' என்று கூறி, விற்றுவிடுவர்.
* புதிதாக தயாரித்த புரோட்டாவுடன் பழைய புரோட்டாவை கலந்து விடுவர். 'கொத்து புரோட்டா' கேட்டால், பழைய புரோட்டாவில் குருமா, முட்டையை ஊற்றி, வெங்காயம், தக்காளியை வதக்கி, 'மணக்க, மணக்க' தந்துவிடுவர். நாக்கை சப்புக்கொட்டியபடி, நாம் சாப்பிட வேண்டியது தான்.
* மீன் மார்க்கெட்டுகளில் ஓரமாக சேரும் கழிவு மீன்களை, குறைந்த விலைக்கு வாங்கி வந்து, மாலையில் கடை போட்டு, 'செக்கச் செவேல்' என மசாலா தடவி, 'சுடச்சுட பொறித்த மீன்' என்று கூறி, வாசம் மூக்கைத் துளைக்க, ஊரைக் கூட்டி விற்று விடுவர். பெரும்பாலும் 'டாஸ்மாக்' கடைகளுக்கு அருகில் இவர்கள் கடை விரிக்கின்றனர்.
* ரோட்டோரத்தில் மலிவு விலையில், அண்டாக்களில் ஆவி பறக்க, 'கம, கம' மணத்தையும் பரப்பியபடி, பார்ப்பவர்களின் பசியை தூண்டும் பிரியாணியில், நெய் அல்லது ரீபைண்ட் ஆயிலுக்குப் பதில் மாட்டு கொழுப்பு எண் ணெய்யை கலக்கின்றனர். இதைத் தொடர்ந்து சாப்பிட் டால், இதய நோயை நாமே வலிய இழுத்து வருவதற்குச் சமம்.
* கோடை காலத்தில், கலர் கலராய், ஜூஸ் என்ற பெயரில் குளிர்ச்சியாக விற்கப்படும் திரவங்களில் சர்க்கரைக்குப் பதில், 'சாக்கரின்' கலக்கின்றனர். இதனால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உறுதி. பெரும்பாலும் வைகை கரையோரங்களில் இக்கடைகளை காணலாம்.
* கறிக்கோழியின் கழிவு, நோயால் இறந்த கோழி... இவற்றை'ஓசி'யில் வாங்கி வந்து, கவர்ச்சியான கலரில் மசால் தடவி, 'சிக்கன் 65' என்ற பெயரில், 100 கிராம் 12 ரூபாய்க்கு விற்கின்றனர். இதில் நோயை பரப்பும் அனைத்து கிருமிகளும் 'ஆஜர்' ஆகியிருக்கும்.
* இட்லி மாவில் பழைய சோற்றை ஆட்டி கலந்து, விற்கின்றனர். மல்லிகைப்பூ இட்லிக்கு சூப்பர் மாவு ரோட்டோரம் ரெடி.
* சில ஓட்டல்களில் அரிசி உலை வைக்கும்போதே சுண்ணாம்பை துணியில் கட்டி, அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைப்பர். இதில் வெந்த சோறு, 'விரைப்பாக' இருக்கும். அதிகம் சாப்பிட முடியாது. ஓட்டல்காரர்களுக்கு அரிசி செலவு குறையும்.இப்படி நம்மூரில் புதுப்புது உருவில் புதுப்புது கலப்படம் நடக்கிறது.பொதுமக்களே உஷார்: நமக்கு தெரிந்தவை இவை. தெரியாமல் இன்னமும் நிறைய கலப்படங்கள் நடக்கின்றன. இனியும் புதிய உத்திகள் கண்டுபிடிக்கப்படலாம். எனவே, 'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும். எங்கும் சாப்பிடும் முன், அந்த கடையின் சுகாதாரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

கலப்படத்தை எப்படி கண்டறியலாம் : மதுரை கீழமாசி வீதியில் உள்ள தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தில், 1978 முதல் உணவுப் பொருட்கள் தர பரிசோதனை மையம் செயல்படுகிறது. இங்கு அனைத்து வகை உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கின்றனர். மத்திய சிறை மற்றும் ரயில்வே கேட்டரிங்கிற்கு கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களை இங்கு ஆய்வு செய்கின்றனர். யார் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை ஆய்வுக்கு கொடுக்கலாம். ஆய்வு முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். குறைந்த அளவாக 50 முதல் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என இதன் சங்க கவுரவச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்தார். விபரங்களுக்கு 0452-232 2188ல் தொடர்பு கொள்ளலாம்.

தேநீர்'... சில உண்மை!

`டீ` எனப்படும் `தேநீர்` நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக` அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக்கொண்டிருக்கிறது என்பது தேநீர்ப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ` தவிர பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே...

* சூடான லவங்கப்பட்டை டீ, பெண்க ளுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மனஅழுத்தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டுச் சுதந்திரமாக உணர உதவும். மேலும், சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.

 *ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `மசாலா டீ`யும், `சிலோன் டீ`யும் இதமளிக்கும்.

*`கிரீன் டீ`யில் உள்ள `பாலிபினால்கள்` அல்லது `பிளேவனாய்டுகள்` ஒட்டுமொத்த உடல்நலத் துக்கு நல்லது. குறிப்பாக புற்றுநோய் வராமல் தடுப்பதில். புற்றுநோய் போன்ற ஆபத்து களுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத்தடுக்கும் பணியில் டீயில் உள்ள `ஆன்டிஆக்சிடன்ட்கள்` உதவுகின்றன.

*`மூலிகை டீ`யில் `டேனின்` இல்லை. எனவே நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது மூலிகை டீ அருந்த லாம். மூலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச் சிக்குரிய செய்தி.

* `இஞ்சி டீ` கொஞ்சம் காரசாரமாக இருந்தாலுமë, இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாகப் புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாகப் பெண்களுக்கு.

*`அஸ்வகந்தா டீ` மனநிலையை உயர்த்தும், மனதுக்கும் உடம்புக்கும் ஓர் துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஊக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.

* டீயுடன் `ஸ்வீட் ரூட்` அல்லது `லீகோரைஸை` சேர்த்தால் வழுக்கை, பொடுகு, பற்சிதைவு, தொண்டைப் புண், காசநோய், உடம்பு துர்நாற்றம், மனஅழுத்தம், சோர்வு, தூக்கமில்லாமை, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளைக் குறைக்கும்.

* ஏலக்காய் டீயை எவர் விரும்பமாட்டார்? அது இதமளிக்கும், வாநëதி உணர்வைத் தடுக்கும், ஜலதோஷம், இருமலுக்கு மிகவும் ஏற்றது. மனஅழுத்தத்தைக் குறைத்து உடலுக்குப்புத்துயிர் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏலக்காய் டீ நல்லசுவையாகவும் இருக்கும்.