Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Tuesday, July 6, 2010

கல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..


சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்த நிர்பேசிங் என்ற மாணவர் ஜூலை 5ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரையில் உள்ள தனது நண்பரைப் பார்க்க பைக்கில் வந்த அவரை வழிமறித்த சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளால் சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரும் கொலையைச் செய்தவர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்.

இம்மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே வட மாநிலங்களில் இருந்து புதிய மாணவர்களை இங்கே உள்ள கல்லூரிகளில் சேர்த்து விடும் தரகர் வேலை பார்த்து நிறைய கமிசன் சம்பாதித்து வந்துள்ளனர். மாணவர் நிர்பேசிங், தான் படித்து வரும் கல்லூரியில் தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தரகு கமிசனுக்காக சேர்த்து விட்டுள்ளார். அதே மாணவரை சத்யபாமா கல்லூரியைச் சேர்ந்த இன்னொரு மாணவரும் தனது கல்லூரியில் சேர்த்து விட முயற்சித்துள்ளார். இந்த தரகுக் கமிசன் போட்டியில் சத்யபாமா கல்லூரி மாணவர் தோற்று விடவே, ஆத்திரம் கொண்ட அவர், தனது சக மாணவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு நிர்பேசிங்கை தாக்கி கொன்றுள்ளார்.
பத்திரிகை செய்திகளின் படி சென்னையில் மட்டும் சுமார் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரையில் வட மாநில மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் பெரும்பான்மையினர் கல்லூரி விடுதியில் தங்காமல் வெளியில் அறை எடுத்து தங்குவதோடு, சொந்தமாக மோட்டார் சைக்கிள், செல் போன் என்று ஊதாரித்தனமாக செலவுகள் செய்கின்றனர். தமது செலவுகளை ஈடுகட்ட இது போன்ற தரகு வேலைகளில் ஈடுபடும் இவர்களுக்குள் எப்போதும் போட்டி இருந்து வந்துள்ளது. இது போன்ற ஒரு விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேறு ஒரு கல்லூரி மாணவன் ஒருவனை கடத்தி சிறை வைத்த சம்பவமும் நடந்துள்ளது.

முந்தைய சம்பவங்களில் தூங்கி வழிந்த காவல்துறை, இப்போது பிரச்சினை கொலை வரையில் சென்றுள்ளதால் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக சம்பவத்தில் ஈடுபட்ட 8 சத்தியபாமா கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. கல்லூரி நிர்வாகங்கள் இது வரை இந்த சம்பவம் பற்றி வாயைத் திறக்காமல் கமுக்கமாக இருக்கின்றன. கல்லூரி நிர்வாகத்துக்கோ அரசுக்கோ தெரியாமல் இரகசியமாக இது போன்ற செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை. தனது கல்லா நிறைவதில் பிரச்சினை இல்லாத வரை கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் குளிர் காய்வதையே விரும்பும்.

கல்வி என்பது ஒரு சேவை என்பதாக இருந்த காலம் போய் வியாபாரமாக மாறி தற்போது சூதாட்டம் எனும் அளவுக்கு சீரழிந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 6.89 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி சுமார் 5.87 லட்சம் மாணவர்கள் தேறியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இதில் எல்லா பிரிவுகளையும் உள்ளிட்டு ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும். இதில் சுமார் 1.2 லட்சம் மாணவர் இருக்கைகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மூலம் வரும் மாணவர்களால் நிரப்பப்படும். மீதம் உள்ள இடங்கள் தனியார் கல்வி நிர்வாக கோட்டாவில் வரும்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் நல்ல சதவீதம் எடுத்து வரும் மாணவர்களும் கூட தனியார் கல்லூரிகளில் சேரும் போது அண்ணா பல்கலைக்கழகம்
நிர்ணயித்துள்ள செமஸ்டர் பீஸான முப்பத்தையாயிரம் அழ வேண்டும். இதுவே வருடத்துக்கு எழுபதாயிரம்; நாலு வருடத்துக்கு இரண்டு லட்சத்து என்பதாயிரம்! இதுவல்லாமல் லேப் கட்டணம், லைப்ரரி கட்டணம், பேருந்து கட்டணம் என்று பல்வேறு வகைகளில் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். இப்படி கறக்கும் பணத்துக்கு ஏற்ப அந்த வசதிகளும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும் தரத்தில் இருப்பதில்லை என்பது தனி கதை. நிர்வாக கோட்டாவில் வரும் மாணவர்களுக்கான கட்டணம் என்பது அந்தந்த தனியார் கல்லூரி நிர்வாகம் அவர்கள் இஸ்டத்துக்கு நிர்ணயிக்கும் கட்டணம் தான்.

இப்படி பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்டுகளை நிரப்ப தனியார் கல்லூரிகளுக்குள் அடிதடியே நடக்கும். ஒவ்வொரு கல்லூரியும் வெளி மாநிலங்களில் தமக்கென பிள்ளை பிடித்துக் கொடுக்க ஏஜெண்டுகளை நியமித்துள்ளனர். இந்த பிள்ளைப் பிடிக்கிகள் ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் சமயங்களில் தமிழ் நாட்டு தனியார் கல்லூரிகளின் கவர்ச்சிகரமான ப்ரொபைல் ஒன்றை வைத்துக் கொண்டு ஏமாளிகளை வளைத்துப் பிடித்து லட்சக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு இங்கே சீட்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். துபாய் கேக்ரான் மேக்ரானில் கக்கூஸு அள்ளும் வேலைக்கு ஆள் பிடிப்பது போலத் தான் இது நடக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த எனது குடும்ப நன்பர் தேவசகாயம் பாபு தனது மகன் ரோஹன் பாபுவை சில வருடங்களுக்கு முன்பு இப்படித் தான் ஏமாந்து போய் சேலம் வினாயகா மிசன் கல்லூரியில் உயிரி பொரியியல் படிப்பில் சேர்த்து விட்டார். கடைசி செமஸ்டரின் போது தான் அந்த பாடப் பிரிவுக்கு வினாயகா கல்லூரி முறையான அனுமதிமதி பெற்றிருக்காத விசயமே இவருக்கு தெரியவந்தது. இன்று அந்தப் பையன் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து படித்தும் வேலையில்லாமல் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். மகனை இன்ஜினியர் ஆக்கி விட வேண்டும் எனும் கனவில் தனது சொத்துக்களையும் நகை நட்டுகளையும் விற்று லட்சக்கணக்கில் பணம் கட்டிவிட்டு இப்போது அவர் அழுது புலம்பிக் கொண்டுள்ளார். நான்கு வருடங்களும் வீண் – படித்த படிப்பும் வீண்.

இப்படியெல்லாம் பிள்ளை பிடிக்கிகள் வைத்து சீட்டை நிரப்பியும் கூட சென்ற ஆண்டு சுமார் முப்பதாயிரம் சீட்டுகள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தது. ஒரு பக்கம் பள்ளி கல்லூரி
கட்டணங்களை முறைப்படுத்த தனியார் நிர்வாகத்தோடு போராடிக் கொண்டிருப்பதாக சீன் போடும் அதே தமிழக அரசு தான் மறுபுறம் பொரியியல் கல்விக்கான மதிப்பெண் உச்ச வரம்பை ( கட் ஆஃப்) இந்த ஆண்டு தளர்த்தியுள்ளது. இது மேலும் தனியார் கல்லூரிகளிடம் அடிமாடுகளைக் கொண்டு சேர்ப்பதற்கே உதவும் என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏஜெண்டுகளை நியமித்தும் கல்லா நிறையாததால் வெளி மாநில மாணவர்களே தரகர்களாக செயல்படுவதை கண்டும் காணாமலும் அங்கீகரிக்கிறார்கள் தனியார் கல்வி வியாபாரிகள்.
உலகமயமாக்கம் உருவாக்கி விட்டுள்ள நுகர்வு வெறி மாணவர்களைப் படிக்கும் காலத்திலேயே செல்போன், லேட்டஸ்ட் மாடல் பைக், விதவிதமான துணிமணிகள், கம்ப்யூட்டர் கேம்ஸ்  என்று ஊதாரித்தனமாக செலவு செய்ய தூண்டுகிறது. எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் எனும் பிழைப்புவாத கண்ணோட்டத்திற்கு ஆட்படும் அவர்கள் தமது சொந்த மாநில அப்பாவி மாணவர்களை ஏமாற்றித் தரகு வேலை பார்க்க கொஞ்சமும் கூசுவதில்லை. அதுவே தொழில் போட்டி அளவுக்கு உயர்ந்து இப்போது கொலையில் சென்று முடிந்துள்ளது. இதெல்லாம் தெரியாத அப்பாவிகள் அல்ல அரசும் போலீசும். முன்பு ரெண்டாம் நம்பர் தொழிலும் சாராயத் தொழிலும் கல்லாக் கட்டியவர்களும் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளும் தான் இன்றைய கல்வித் தந்தைகள். கள்ளனும் காப்பானும் ஒருவனாகவே இருக்கும் ஒரு சமூக அமைப்பில் இது போன்ற விடயங்களில் போலீசின் சுயேச்சையான தலையீட்டை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.
ஒருபக்கம் பொரியியல் கல்வியின் மேல் தேவையற்ற மோகம் ஒன்றை பெற்றோர்கள் கொண்டிருக்கிறார்கள். நடப்பில் இருக்கும் பொரியியல் கல்வித் திட்டமே ஒரு டுபாக்கூர்; இந்த கல்வித் திட்டத்தால் ஒரு மாணவன் எந்த வகையிலும் தொழில்நுட்பங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்து விட முடியாது. நான்காண்டுகள் படித்து வரும் ஒரு பொரியியல் மாணவன் ஒரு டெக்னிக்கல் குமாஸ்தாவாக அடிமை வேலை பார்க்கத்தான் பயிற்றுவிக்கப்படுகிறான். இந்தியாவின் பொரியியல் கல்வி முறை குறித்தும் அதன் மொக்கைத் தனம் குறித்தும் பின்னர் விரிவாக எழுத ஆசை. பார்க்கலாம்.

தேர்தலில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் மக்களை எப்படி இந்த ஓட்டு அரசியல் அமைப்பு முறை ஊழல் படுத்தியுள்ளதோ அதே போல் மாணவர்களை ஊழல் படுத்தும் ஒரு
போக்காகவே இதைக் காண முடிகிறது. லஞ்சம் வாங்கும் மக்கள் எப்படி தமது தார்மீக கோபத்தை இழந்து அரசியல் மொக்கைகளாகிறார்களோ அப்படியே மாணவர்களும் படிக்கும் காலத்திலேயே ஊழல் படுத்தப்பட்டு சமூக மொக்கைகளாக்கப்படுகிறார்கள். இளமைப் பருவத்துக்கே உரிய துடிப்பும் சமூக அக்கரையும் கோபமும் வழித்தெறியப்பட்டு பிழைப்புவாதிகாகிறார்கள் மாணவர்கள். பிழைப்புவாதம் என்பதை வேரிலிருந்தே நஞ்சாக ஊட்டி வளர்க்கிறது இந்த சமூக அமைப்பு. அதன் ஒரு வெளிப்பாடு அழகிரி பாணி இடைத் தேர்தல் என்றால் இன்னொரு பாணி வெளிப்பாடு தான் நிர்பேசிங்கின் கொலை.

Wednesday, May 12, 2010

ரஜினி என்ற மனிதரின் உயர்ந்த சிந்தனை!


தான் சார்ந்த சமுதாயம், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், அவர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடைமைகள் போன்றவற்றை எப்போதும் மறக்காமல் இருப்பவர்தான் சிகரங்களைத் தொடுகிறார். சமூகம் தன்னைக் காயப்படுத்தினாலும், பதிலுக்கு கனியைத் தருகிற மனம் உள்ளவர்களே மிகச் சிறந்த மனிதர்களாக போற்றப்படுகிறார்…

அப்படி ஒரு மனிதர்தான் ரஜினிகாந்த். முன்பு தினந்தந்தியில் வெளியான அவரது கட்டுரையொன்றை மீண்டும் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையை இங்கே திரும்பத் தருவது ரசிகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். தலைவரின் சிந்தனையைப் புரிந்து கொள்ள இது உதவும்.

அந்தக் கட்டுரை:
“கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒருநாள் உதவாமல் போகமாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கைவிட்டுவிட மாட்டான்.

ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதேபோல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அப்படி இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது, இருப்பதும் கிடையாது. அதுதான் இயற்கை.

இயற்கை என்று சொல்லும்போது, அதில் பல அம்சங்களும் அடங்கியிருக்கும். கஷ்டம் – சுகம்; பாவம் – புண்ணியம்; நல்லவர்கள் – கெட்டவர்கள்… என்று பலவகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு.

வாழ்க்கையில் கஷ்டத்தையும் ஓரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும்.

நீங்கள் ஓர் ஏர்கண்டிஷன் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறகு “ஏ.சி” ரூமுக்குப் போனால் அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.

ஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன் கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான்.

இறைவனையும் இயற்கையையும் புரிந்து கொள்ளாத மனிதன்!

நமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது, நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப் போய்விடுகிறோம்.

இப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால்தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும்பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம்.

அதேபோல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும்கூட.

ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ளவேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பணக்கஷ்டம் – அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை.

சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழமுடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை… போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்கக்கூடியவை.

பணம் இருந்தா போதுமா…

நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு. பணம் இருந்தால், எந்த துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நான் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம்தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள்தான் நமக்கு அதிக வேதனையைக் கொடுக்கக்கூடிய கஷ்டங்கள்.

பிரச்சினைகள் வரும்போது அது பணப் பிரச்சினையோ அல்லது மனநிலையைப் பாதிக்கக் கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ – என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படி தீர்வு காணமுடியும் என்று யோசிக்க வேண்டும்.

அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும்.

தவறு நம்முடையதாக இருந்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடையதாக இருந்தால் அதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல – ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டால், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.

ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில்தான் – மனதில்தான் இருக்கிறார்.

மனதில் ஒன்று… வெளியில் ஒன்று எனப் பேசும் இயல்பு எனக்கு எப்போதும் இருந்ததில்லை.

நான் எத்தனையோ வெளிநாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால்தான் நம்முடைய தமிழ்நாட்டை “வந்தவரை வாழ வைத்த தமிழகம்” என்று சொல்கிறார்கள்.

ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத் தன்மையும் இருந்தது என்று சொன்னால் அவனுடைய மொழி பற்றியோ, சாதி பற்றியோ, எதைப்பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.

ஆகவே, இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா – அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி…”

Saturday, May 8, 2010

பணவீக்கமும் மன வீக்கமும்

1997ல் உங்கள் வாழ்வில் என்ன மாறுபாடு ஏற்பட்டது? 1998, 2003, 2004, 2009 போன்ற ஆண்டுகளில் உங்களுக்குத் தெரிந்தவர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான் என்று கூறிவிட வேண்டாம்.

நிறுவனங்களின் பங்குதாரர்கள் மனம் மாறுவது, துரோகம் செய்வது, குடும்பங்கள் பிரிவது, விவாகரத்து, காதல் முறிவு, கள்ளத் தொடர்புகள் என்று எத்தனையோ அம்சங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

1997ல் ப.சிதம்பரம் கனவு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த ஆண்டு பணவீக்கம் நிலையாக இருந்தது. அந்த ஆண்டு இறுதியில் வருமான வரி ஏமாற்றியவர்கள் தாமாக முன் வந்து தங்கள் கணக்குகளைக் காட்ட ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

1998ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

2003ல் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

2004ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. 2009ல் மீண்டும் அந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பொருளாதார மன நிலைகளை மட்டும் மாற்றுவதில்லை. தனிப்பட்ட உணர்வுகள் என்று கூறப்படும் உணர்வுகளை அவை தாக்குகின்றன.

காசு, பணம் மனிதனை மாற்றிவிடுகிறது என்ற பொருளில் இது கூறப்படவில்லை.

பொருளாதார இயக்கங்களுக்கு மாற்றாக, பதிலியாக மன உணர்வுகள் மாறிவிடுகின்றன.

பொய் சொல்வது, உண்மையைச் சொல்லாமல் இருப்பது, புது ஈர்ப்புகள் கொள்வது, புது தோழமை தேடுவது, அதற்கான தேடலில் இருப்பது, அதை மறைப்பது, மறைப்பதாகச் சொல்லாமல் இருப்பது, நிலை மாறுவது, அதற்கான நியாயங்களைப் புனைந்துகொள்வது, புனைவை நியாயப்படுத்துவது, விருப்பத்தை நிர்ப்பந்தம் என்று காட்டுவது, முடிவுகளைத் தாக்கங்களாக மாற்றுவது என்று பல வித தர்க்கங்களை மனம் கொண்டுவிடுகிறது.

பொருளாதார அளவுமானிகள் தினமும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எப்போதும் கணக்கிடப்படுகின்றன.

ஒரு அமைப்பின் உணர்வுரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் கணிக்க பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

குடும்பங்கள் சிதைவது, பல உறவுகளை ஆணும் பெண்ணும் கொள்வது, கல்வி, தொழிலில் ஏமாற்றம் காரணமாக தற்கொலை செய்துகொள்வது பற்றிய புள்ளிவிவரங்கள் வெளிவர பல பத்தாண்டுகள் ஆகிவிடுகின்றன. அதற்குள் உணர்வின் விதை வெடித்து மரமாகி காடாகிவிடுகிறது.

டெலுஸ்-கிடாரி எழுதிய ‘ஆண்டி-இடிபஸ்’ என்ற ‘இடிபஸுக்கு எதிராக’ என்ற நூலின் அடிக் குறிப்பு, ‘முதலாளித்துவமும் மனச்சிதைவும்’ என்பதாகும்.

முதலாளித்துவம் என்பதே மனச்சிதைவுதான். அதை மனச்சிதைவாக அறிந்துகொள்ளாதபடி அதை நோக்கி எல்லோரையும் அது நகர்த்திக்கொண்டிருக்கிறது.

உறுப்புகள் இல்லாத உடல் என்று மனிதனை டெலுஸ்-கிடாரி வர்ணிக்கிறார்கள்.

மனிதனின் உறுப்புகளாக வெளி அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மனிதனின் மூளையாக பொருளாதார அமைப்பும் அதிகாரமும் மாறிவிட்டன.

ஒரு தனிமனித இயக்கத்தை இவை மாற்றிக்கொண்டிருக்கின்றன.

சிரிப்பு, அழுகை, பதற்றம், பரிதவிப்பு என்று அனைத்தும் சமூக எந்திரத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் புதுக் கடன் கொள்கை அறிவித்தார். அதில் ரிசர்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகள் தரும் கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்காது என்று கூறப்பட்டது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கும் தொகை விகிதமும் உயர்த்தப்பட்டது. இதனால் பணப் புழக்கம் குறையும்.

இதனால் மனம் மாறிவிடாது என்று கூறிவிட முடியாது.

உறுப்புகள் அற்ற உடல் எப்போதும் மாற்று உறுப்புகளுக்கான தயாரிப்பில் இருக்கிறது.

அவை கிடைக்காமலா போய்விடும்?

Thursday, May 6, 2010

துணிவுதான் துணை...!

மும்பை நகருக்குள் கடல்வழியாக உள்ளே புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட வழக்கில், உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கசாப், குற்றவாளி என்று மும்பை தனிநீதிமன்றம், அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளது.
கசாப் மீது நிரூபிக்கப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்துமே சட்டப்படியாக மரண தண்டனை அளிக்கத் தக்கவை. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 6-ம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கசாபுக்கு தூக்கு தண்டனை உறுதி என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இந்த தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதில்தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது.
புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்சல் குரு கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டும், இதுவரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், இந்த வழக்கிலும் சில அரசியல் காரணங்களுக்காக, கசாபுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தாலும்கூட, அவரை பல்வேறு காரணங்களுக்காக தூக்கிலிட மாட்டார்கள் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, வடஇந்தியாவின் பல்வேறு இடங்களில், கசாபுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கசாபுக்கு மரண தண்டனை அளித்தால் இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைக்கு குந்தகமான விளைவுகள் ஏற்படும் என்றும், "எல்லை தாண்டிய தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை இத்தீர்ப்பு' என இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறிய கருத்து தேவையற்றது என்றும் பல்வேறு செய்திகளை இந்தியப் பத்திரிகைகளும் எழுதி வருகின்றன.
இந்தியாவில் மும்பையில் புகுந்து அனைவரையும் சுட்டுத்தள்ளிய கொலைகாரன் என்ற அளவில், கசாபுக்கு இந்தியக் குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு என்ன தண்டனை விதிக்கப்படுமோ அந்த தண்டனை விதிக்கப்படுகிறது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, இதனை வேறு அரசியல் கோணங்களில் பார்ப்பதும், அதற்காக நீதியை வளைக்க முற்படுவதும் நியாயமில்லை. எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகளைக் குருவியைச் சுடுவதுபோல சுட்டு வீழ்த்திய ஒரு கொலைகாரன், தீவிரவாதி எந்த நாட்டை, எந்த மதத்தை, எந்த இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தால்தான் என்ன? வாக்கு வங்கிக் கண்ணோட்டத்தில், இதுபோன்ற பிரச்னைகளை அணுக முற்படுவதே குற்றம்.
கசாபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால் அவருக்கு பாகிஸ்தான் உதவிடுமா என்ற கேள்வியை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கிடம் நிருபர்கள் கேட்டிருக்கிறார்கள். அவரும், "யாராவது கேட்டால் உதவுவோம்' என்று கூறியுள்ளார். யாராவது கேட்டால் என்று தெரிவித்திருப்பதன் மூலம் "யார் வேண்டுமானாலும் கசாபுக்காக உதவி கோரலாம்' என்பதை அவர் மறைமுகமாகச் சொல்கிறார். அபத்தமான கேள்வி. விஷமத்தனமான பதில். நமது அரசு இதை வேடிக்கை பார்த்து மகிழ்கிறது.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திட சதித்திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரிடமும் பாகிஸ்தான் இன்னமும் விசாரணை நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்த விசாரணையின் நீட்சியாக, கசாபிடம் விசாரிக்க பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரிக்கை வைத்திருக்கிறது. இப்போது, கசாபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுவிட்டால், விசாரணை முடிவுறவில்லை என்ற அடிப்படையில், கைது செய்த 7 பேரையும் பாகிஸ்தான் விடுதலை செய்துவிடும் வாய்ப்புகளும் உள்ளன. தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல் விசாரணைக்கு அனுமதித்தாலும், அந்த 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படுமா என்பது வேறுவிஷயம்.
ஆனால் இதற்காகவெல்லாம், கசாபை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றிவிட இந்திய அரசு முயற்சிக்குமேயானால், இந்தியாவின் பலவீனம் வெளிப்படுமே தவிர,
மனமாற்றத்தையோ அல்லது அச்சத்தையோ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளிடம் ஏற்படுத்திவிட முடியும் என்று கருதுவது தவறு. இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் வாதிடும்போது, கசாப் பற்றி குறிப்பிடுகையில், "பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கொலை இயந்திரம்' என்றே வர்ணித்துள்ளார். தவறுக்குப் பொறுப்பேற்பது மட்டுமன்றி, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவதுதான் நாம் பாகிஸ்தான் அரசுக்கு விடுக்கும் கோரிக்கையாக இருக்க முடியும்.
கசாப் மூளைச் சலவை செய்யப்பட்ட கொலை இயந்திரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அதனை இங்குள்ள இஸ்லாமிய அன்பர்களும், அமைப்புகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருதுவது இந்தியாவைத் தாய்நாடாகக் கொண்ட, இந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமிய சமுதாயத்தையே இழிவுபடுத்துவதாகும். அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பைப் பற்றித் தெரியாதவர்கள்.
"கசாப் குற்றவாளி' என்று மும்பை தனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன், இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் பலியான ஆம்பூரைச் சேர்ந்த ஓட்டல் பணியாளர் ரஹமத்துல்லாவின் மனைவி குர்ஷித் பேகம் சொன்ன கண்ணீரில் நனைந்த வார்த்தைகள்- "அவனைச் சுட்டுக் கொல்ல வேண்டும்' என்பதுதான்.
நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மட்டுமல்ல, இந்தச் சம்பவத்தை தொலைக்காட்சியில் காண நேர்ந்த, தன் குடும்ப அளவில் பாதிக்கப்படாத மக்களின் உணர்வும் கசாபுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதோடு, நிறைவேற்றப்படவும் வேண்டும் என்பதுதான்.
கசாபுக்கு தூக்கு தண்டனையை காலம்தாழ்த்துவதன் மூலம் பேச்சு வார்த்தைகளில் சுமுகமான, சாதகமான நிலைகள் உருவாகிவிடும் என்று இந்திய அரசு கருதினால் அதனை அப்பாவித்தனம் என்று கருத இங்கே யாரும் முட்டாள்கள் அல்ல. இன்றைய ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் என்றோ, திட்டமிட்டே இஸ்லாமிய சமுதாயத்தை இழிவுபடுத்தி அதன் மூலம் இன உணர்வைத் தூண்டும் முயற்சி என்றோதான் கூறத் தோன்றுகிறது.
ஆட்சியாளர்கள் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் நிறுத்த வேண்டும். சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் இடம் கொடுத்தால் மடம் பிடுங்குபவர்கள்!

இதயம் விற்ற காசுகள்

இம்மனித வாழ்க்கையின் மிகக்கொடுமையான காலம் சொந்த மண்னைவிட்டு, இரத்தப் பாசங்களைவிட்டு உலகின் எங்கோ மூலையில் பணத்துக்காக பணியாற்றுவதுதான். எந்த விசேஷத்துக்கும் கலந்துகொள்ள இயலாமல் பாலைவனத்தில் தனித்திருக்கும் மரத்தைப் போன்றதான வாழ்க்கையிது. எல்லோருமிருந்தும் யாருமற்றதான ஒரு வாழ்க்கையிது.யாருக்கான வாழ்க்கை? எதை எதிர்பார்த்து இந்த வாழ்க்கை? பணம், பணம், பணம். உள்ளூரில் பெறும் சம்பளத்தைவிட வெளியூரில் சம்பளம் அதிகம். வெளியூரில் பெறும் சம்பளத்தைவிட வெளிநாட்டில் சம்பளம் அதிகம். இப்படி, சம்பளம் அதிகமாக கிடைக்கிறதென்பதற்காக எல்லோரையும் பிரிந்து நரகத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேடலே மகிழ்ச்சி/ஆனந்தம் தான் என்பார், சத்குரு அவர்கள். அந்த மகிழ்ச்சியை முழுதும் துறந்து வாழும் அயல் வாழ்க்கை அடிப்படைக்கே முரணான வாழ்க்கை தானே.மனிதனை வெறுமை சூழ்ந்துகொள்வது எப்போது? அவனுக்கென்று யாருமில்லாத போது. ஆம், அந்த வகையில் சொந்தங்களை பிரிந்திருக்கும் வாழ்க்கை, ஒரு வெறுமையான வாழ்க்கைதான் என்றால் அது மிகையாகாது. செய்ற்கையான மகிழ்ச்சியில் ஆறுதலைத் நாடும் மனம் ஆரம்பத்தில் அதையே தொடர்ந்து தேடினாலும் காலவெள்ளத்தில் உண்மையை உணர்ந்துகொள்ளும்போது அற்புதமானதொரு வாழ்க்கையை இழந்திவிட்டது இறுதியில் தான் தெரிகிறது. காலம் கடந்த ஞானோதயத்தால் என்ன பயன்?சொந்தங்களுடன் பேசி அளவளாவி, குதூகலமிட்டு விளையாடி சுகதுக்கங்களில் பங்கேற்று, ஊர் திருவிழாக்களில், பண்டிகைகளில் கலந்துகொண்டு அடையும் இன்பத்திற்கு ஈடு ஏது? தீபாவளி, பொங்கல், ஆடிக்கிருத்திகை, விநாயக சதுர்த்தி என்று எந்த விசேஷத்துக்கும் கலந்துகொள்ள இயலாமல் வாழும் இந்த அகதி வாழ்க்கை துன்பத்ட்திலும் துன்பம், கொடுமையிலும் கொடுமை.நம்மூர் உணவு கிடையாது. நம்மூர் மக்கள் கிடையாது. நம் மொழி கிடையாது. உலகின் ஒப்பற்ற மொழியாம் தமிழ் மொழியில் பேசி மகிழ முடியவில்லை. இதைவிடவும் பெருங்கொடுமை இவ்வுலகில் இருக்க முடியுமா? இருட்டறை யில் சிறையிலிடப்பட்டிருப்பவனுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?என் கணித ஆசிரியர் இவ்வாறு அடிக்கடி கூறுவதுண்டு: “உள்ளூர் நட்டமும் வெளியூர் இலாபமும் ஒன்று” என்று. அந்நாட்களில் இதன் பொருள் புரியவில்லை. ஆனால், இன்று அதனை மிகச்சரியாகப் புரிந்துகொண்டுள்ளேன். ’திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதெல்லாம் குறுகிய காலத்திற்கு மட்டும் தான். அதனால் தான், சொர்க்கமே என்றாலும் அது நம்மூருக்கு ஈடாகாது என்றனர்.இறுதிக்காலத்தில் இருக்கும் தாத்தா, பாட்டி பாசத்துடன் வளர்த்த அப்பா, அம்மா, உடன்பிறப்புகள் என எல்லோரையும் பிரிந்து, வெறும் பணத்தை மட்டும் மாதாமாதம் அனுப்புவது என்பது இதயத்தை விற்று சம்பாதித்த காசுகள் தான்