உன்னாலே உன்னாலே படம் (விமர்சனம் பின்னர் எப்பொழுதாவது!) பார்த்தபின் நானும் க.ந.(சு- இல்லை!)வும் பேசிக் கொண்டதை இயன்றவரை இங்கே எழுத்து வடிவமாக்கியிருக்கின்றேன். எனக்கு மட்டும் தெரிந்த (பிரபலமல்லாதவன்) நண்பன் க.ந. என்பதால் அவன் பற்றிய விபரங்களை இங்கே தவிர்த்திருக்கின்றேன்.
நான்: (படத்தில்) நல்ல முடிவு. புரியாமல் சேர்வதைவிட புரிந்து பிரிந்துவிடலாம்.
க.ந: காதல் என்பதே பிரிந்திருப்பதுதான்.
நான்: பிரிந்தால்தான் காதலா?
க.ந: சேர்ந்தால் காதல் இல்லை.
நான்: காதலிப்பது ஒருவராகவும், கல்யாணம் செய்துகொள்வது வேறொருவராகவும் இருக்க வேண்டுமா?
க.ந: நான் அப்படிச் சொல்லவில்லை. காதல் கல்யாணத்தின் பின் செத்துவிடுகிறது.
நான்: கல்யாணத்தின் பின் ஒருவரையொருவர் காதலிக்க முடியாதா?
க.ந: காதலிக்கும் போதிருக்கும் சூழல் கல்யாணத்தின் பின் இருப்பதில்லை. சூழல் மாறிவிடுவதால் காதலித்த மனிதர்களும் கல்யாணத்தின்பின் மாறிவிடுகிறார்கள்.
நான்: காதல் என்பது உணர்வு. அதெப்படி மாறும்?
க.ந: உணர்வையே அந்தந்தச் சூழல்தான் தீர்மானிக்கிறது.
நான்: பொதுமைப்படுத்திக் கதைப்பதால் எனக்கு விளங்கிக்கொள்ளக் கடினமாயிருக்கிறது.
க.ந: நான் காதலித்தேன்.
நான்: அட, புதிசாயிருக்கிறதே! யார் அவள்?
க.ந: அவள் இப்போது திருமணம் செய்து குழந்தைகளுடன் இருப்பதால் அவளின் விபரங்களைச் சொல்ல விரும்பவில்லை.
நான்: அவள் வேறொருவரைத் திருமணம் செய்திருக்கிறாளா?
க.ந: ஓம்.
நான்: ஏன் ஒருதலைக் காதலா?
க.ந: அப்படியென்றால்?
நான்: நீ அவளைக் காதலித்தாய். அவள் உன்னைக் காதலிக்கவில்லை.
க.ந: நான் அவளைக் காதலித்தேன் என்று எனக்குத் தெரியும். அவள் என்னைக் காதலித்தாளா என்று அவளுக்குத்தான் தெரியும். அவளும் என்னைக் காதலிப்பதாகவே எனக்கு ஒரு உணர்வு இருந்தது.
நான்: ஏன் நீங்கள் இதைப் பற்றி ஒருவருடன் ஒருவர் கதைக்கவில்லையா?
க.ந: இதைத் தவிர எல்லாவிடயங்களையும் பற்றிக் கதைத்திருக்கிறோம்.
நான்: ஏன் முக்கியமான விடயத்தைப் பற்றிக் கதைக்கவில்லை?
க.ந: நீ என்னைக் காதலிக்கிறாயா என்று கேட்பது முக்கியமான விடயமாக எங்களுக்குள் இருந்திருக்கவில்லை.
நான்: இரண்டுபேரும் அறிவாளிகளாகத்தான் இருந்திருக்கிறீர்கள். சரி அதைவிடு. அவளை நீ காதலிப்பது உனக்கு எப்படித் தெரியும்?
க.ந: அவளைப் பார்த்ததில் பிடித்துப் போயிருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவளுடையதும் என்னுடையதுமான பெரும்பாலான கருத்துகள் ஒத்துப்போயிருந்தன. அவள் எனது வாழ்க்கைத் துணையாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன்.
நான்: அப்பிடிப் போடு. பிறகேன் இதைப் பற்றி அவளுடன் கதைக்கவில்லை?
க.ந: பயம்.
நான்: அவளுடன் கதைப்பதற்கு உனக்குப் பயமா?
க.ந: இல்லை. அவளுடன் சேர்ந்து வாழ்ந்தால் இதே போல அவளைத் தொடர்ந்தும் காதலிக்க முடியுமா? இதேபோல அவளுடன் தொடர்ந்தும் பழக முடியுமா என்ற பல பயங்கள்.
நான்: என்னைக் கொலைகாரனாக்காதே. அவளை உனக்குப் பிடித்திருந்தது. அவளுடன் சேர்ந்து வாழவும் விரும்பியிருக்கிறாய். அவளும் உன்னை விரும்பியிருக்கிறாள். பிறகேன் உனக்குப் பயம் வருகிறது? உனக்கு உன் மீதே நம்பிக்கையில்லையா?
க.ந: உனக்கு விளங்கும்படியாக சொல்ல எனக்கு முடியவில்லை. காதலிக்கும்போது எந்தக் கட்டுபாடுகளுமில்லை. எந்தச் சுமைகளோ, பாரங்களோ இல்லை. இவற்றைவிட முக்கியமான விடயம் நானும் அவளும் தனித்தனி மனிதர்கள் என்ற உணர்வு இருப்பதால் ஒருவரையொருவர் அவரவர் பலம்/பலவீனங்களுடன் அங்கீகரிக்க முயல்கின்றோம். குடும்பம் என்பது ஒரு வடிவமைக்கப்பட்ட நிறுவனம். அதற்குள் போய்விட்டால் நாம் விரும்பியோ விரும்பாமலோ அதற்குரிய சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்கிறோம். ஒருவர் மற்றவரின் சொத்தாகவோ பொருளாகவோ ஆகிவிடுகிறோம். குடும்பப் பாரங்கள் அதிகரிக்கின்றன. எனக்கும் அவளுக்குமிடையிலான மெல்லிய உணர்வுகள் சாகடிக்கப்படுகின்றன. அல்லது அவற்றுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. இறுகிப்போன சட்டங்களுக்குள் மனித உறவுகளுக்கு அர்த்தமில்லை.
நான்: அட, இதுதான் விசயமா? நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? உலகம் எங்கேயோ போய்விட்டது மகனே! நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்ய் வேண்டும்? நண்பர்களாகச் சேர்ந்து வாழலாமே?
க.ந: அவளுக்கு இதில் உடன்பாடில்லை. பெண் என்ற ரீதியில் அவளுக்கிருக்கும் மேலதிக பயங்கள், பாதுகாப்பின்மை, சமூக அழுத்தங்களை நான் விளங்கிக் கொண்டேன். அதனால் அவளை வற்புறுத்தவில்லை. இதைவிட, சேர்ந்து வாழ்வதில் கூட குடும்பங்களுக்குரிய வடிவம் மறைமுகமாக இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.
நான்: சரி, இப்போது அவளையே நினத்துக்கொண்டு இப்படியே இருக்கப்போகிறாயா?
க.ந: அருகில் இருக்கும்போது மட்டுமே நெருக்கம் இருக்கும். அவளது நினைவுகள் இனிய ஞாபகங்களாக் இருக்கின்றன. அவ்வளவுதான். இனிவரும் நாட்களில் நான் இன்னும் ஒருவரையோ இருவரையோ அல்லது பலரையோ காதலிக்கலாம். யாருக்குத் தெரியும்!
க.ந.வுடன் கதைத்து முடிந்தபின் எனது தலைமுடி ஏராளமாக உதிர்ந்துவிட்டது.
பிறிதொருநாளில் க.ந.வைச் சந்தித்தபோது அவன் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லையா என்று கேட்டேன். தனக்கு இன்னும் பயம் போகவில்லை என்று பதிலளித்தான். கூடவே இந்தப் பிரச்சினைக்கு தன்னிடம் தீர்வில்லையென்றும் சொல்லிவைத்தான்.