Saturday, May 8, 2010

பணவீக்கமும் மன வீக்கமும்

1997ல் உங்கள் வாழ்வில் என்ன மாறுபாடு ஏற்பட்டது? 1998, 2003, 2004, 2009 போன்ற ஆண்டுகளில் உங்களுக்குத் தெரிந்தவர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான் என்று கூறிவிட வேண்டாம்.

நிறுவனங்களின் பங்குதாரர்கள் மனம் மாறுவது, துரோகம் செய்வது, குடும்பங்கள் பிரிவது, விவாகரத்து, காதல் முறிவு, கள்ளத் தொடர்புகள் என்று எத்தனையோ அம்சங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

1997ல் ப.சிதம்பரம் கனவு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த ஆண்டு பணவீக்கம் நிலையாக இருந்தது. அந்த ஆண்டு இறுதியில் வருமான வரி ஏமாற்றியவர்கள் தாமாக முன் வந்து தங்கள் கணக்குகளைக் காட்ட ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

1998ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

2003ல் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

2004ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. 2009ல் மீண்டும் அந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பொருளாதார மன நிலைகளை மட்டும் மாற்றுவதில்லை. தனிப்பட்ட உணர்வுகள் என்று கூறப்படும் உணர்வுகளை அவை தாக்குகின்றன.

காசு, பணம் மனிதனை மாற்றிவிடுகிறது என்ற பொருளில் இது கூறப்படவில்லை.

பொருளாதார இயக்கங்களுக்கு மாற்றாக, பதிலியாக மன உணர்வுகள் மாறிவிடுகின்றன.

பொய் சொல்வது, உண்மையைச் சொல்லாமல் இருப்பது, புது ஈர்ப்புகள் கொள்வது, புது தோழமை தேடுவது, அதற்கான தேடலில் இருப்பது, அதை மறைப்பது, மறைப்பதாகச் சொல்லாமல் இருப்பது, நிலை மாறுவது, அதற்கான நியாயங்களைப் புனைந்துகொள்வது, புனைவை நியாயப்படுத்துவது, விருப்பத்தை நிர்ப்பந்தம் என்று காட்டுவது, முடிவுகளைத் தாக்கங்களாக மாற்றுவது என்று பல வித தர்க்கங்களை மனம் கொண்டுவிடுகிறது.

பொருளாதார அளவுமானிகள் தினமும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எப்போதும் கணக்கிடப்படுகின்றன.

ஒரு அமைப்பின் உணர்வுரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் கணிக்க பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

குடும்பங்கள் சிதைவது, பல உறவுகளை ஆணும் பெண்ணும் கொள்வது, கல்வி, தொழிலில் ஏமாற்றம் காரணமாக தற்கொலை செய்துகொள்வது பற்றிய புள்ளிவிவரங்கள் வெளிவர பல பத்தாண்டுகள் ஆகிவிடுகின்றன. அதற்குள் உணர்வின் விதை வெடித்து மரமாகி காடாகிவிடுகிறது.

டெலுஸ்-கிடாரி எழுதிய ‘ஆண்டி-இடிபஸ்’ என்ற ‘இடிபஸுக்கு எதிராக’ என்ற நூலின் அடிக் குறிப்பு, ‘முதலாளித்துவமும் மனச்சிதைவும்’ என்பதாகும்.

முதலாளித்துவம் என்பதே மனச்சிதைவுதான். அதை மனச்சிதைவாக அறிந்துகொள்ளாதபடி அதை நோக்கி எல்லோரையும் அது நகர்த்திக்கொண்டிருக்கிறது.

உறுப்புகள் இல்லாத உடல் என்று மனிதனை டெலுஸ்-கிடாரி வர்ணிக்கிறார்கள்.

மனிதனின் உறுப்புகளாக வெளி அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மனிதனின் மூளையாக பொருளாதார அமைப்பும் அதிகாரமும் மாறிவிட்டன.

ஒரு தனிமனித இயக்கத்தை இவை மாற்றிக்கொண்டிருக்கின்றன.

சிரிப்பு, அழுகை, பதற்றம், பரிதவிப்பு என்று அனைத்தும் சமூக எந்திரத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் புதுக் கடன் கொள்கை அறிவித்தார். அதில் ரிசர்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகள் தரும் கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்காது என்று கூறப்பட்டது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கும் தொகை விகிதமும் உயர்த்தப்பட்டது. இதனால் பணப் புழக்கம் குறையும்.

இதனால் மனம் மாறிவிடாது என்று கூறிவிட முடியாது.

உறுப்புகள் அற்ற உடல் எப்போதும் மாற்று உறுப்புகளுக்கான தயாரிப்பில் இருக்கிறது.

அவை கிடைக்காமலா போய்விடும்?